1984-ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு ஆளுநர் நஜீப் ஜங்கிடம் முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நிகழ்ந்தது. இதில் பலர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை புதன்கிழமை காலையில் சந்தித்து முதல்வர் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கேஜ்ரிவால் கூறியதாவது: “சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்பது குறித்து டெல்லி துணைநிலை ஆளுநரிடம் கலந்து ஆலோசித்தேன். அவர் சாதகமான பதிலை அளித்துள்ளார். இந்த குழுவின் விசாரணை காலம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தடுக்க காங்கிரஸ் அரசு முயற்சித்ததாக தெரிவித்தார். அதோடு, இந்த சம்பவம் நடந்தபோது, தான் கட்சிப் பொறுப்பில் இல்லாததால், அது தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக கேஜ்ரி வாலிடம் கேட்டபோது, “ராகுலின் பேச்சுக்கும் எனது கோரிக்கைக்கும் தொடர்பில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதியை நிறைவேற்றத்தான் இந்த கோரிக்கையை முன்வைத்துள் ளேன்” என்றார்.
இந்த விவகாரத்தில் பஞ்சாபில் ஆளும் கட்சியாக உள்ள சிரோமணி அகாலி தளம், கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது பற்றி சிரோமணி அகாலி தள எம்.பி. நரேஷ் குஜ்ரால் கூறுகையில், “இது எங்களுடைய நீண்ட கால கோரிக்கை. இதே கோரிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்து பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பேசினார். இந்த விவகாரத்தில் கேஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
இந்த கலவரம் குறித்து காங்கி ரஸ் அரசால் அமைக்கப்பட்ட நானாவதி விசாரணை கமிஷனின் அறிக்கையின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. கலவரத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப் பட்டுள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் சஜ்ஜன்குமார், ஜெகதீஷ் டைட்லர் உள்ளிட்டோர் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.