இந்தியா

ஏபிவிபி புகார்: ஜேஎன்யூ-வில் மேலும் 7 மாணவர்கள் கைது

செய்திப்பிரிவு

ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் 7 மாணவர்கள் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர மேலும் 5 மாணவர்களின் பெயரை போலீஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கன்னய்ய குமார் மீது பாய்ந்துள்ள அதே 124ஏ (தேசத்துரோகச் செயல்), 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் இன்று கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பார்லிமென்ட் தெரு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களைத் தவிர தேடப்பட்டு வரும் மேலும் 5 மாணவர்களையும் கைது செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் ஒத்துழைக்கக் கோரி துணை வேந்தருக்கு போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர்.

எதற்காக கைது?

ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர்களில் ஒருவரான மக்பூல் பட், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மறைவுக்கு துயரம் அனுசரிக்கும் நிகழ்ச்சி ஜேஎன்யூ வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது.

ஜேஎன்யூ நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாஜக எம்.பி. மகேஷ் கிரி மற்றும் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அளித்த புகாரின் பேரில் டெல்லி வசந்த் கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 124ஏ (தேசத்துரோகச் செயல்), 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜேன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமார் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT