ராஜீவ் கொலையாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி, மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
“கருணை மனு காலம் தாழ்த்தி நிராகரிக்கப்பட்டது என்பதற்காக மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது. இந்த வழக்கு அதற்கு பொருத்தமானது அல்ல.
கருணை மனு நிராகரிப்பின் போது காலதாமதம் ஏற்பட்டது உண்மைதான். அதற்கு காரணம் இருக்கிறது. அந்தக் காரணத்தை விளக்கிக் கூறவும் முடியும். மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோருவது ஏற்புடையது அல்ல.
காலம் தாழ்த்தி கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்டதற்காக வீரப்பன் கூட்டாளிகள் உள்ளிட்டோரின் மரண தண்டனை அண்மையில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அந்த வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பு ராஜீவ் கொலை வழக்குக்குப் பொருந்தாது.
சம்பந்தப்பட்ட கைதிகள் எவ்வித துன்புறுத்தலுக்கும் மனித உரிமை மீறலுக்கும் ஆளாக்கப்படவில்லை” என்று வாஹன்வதி வாதிட்டார்.
இதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கருணை மனுக்கள் மீது காலம் தாழ்த்தி முடிவெடுக்கப்பட்டதால் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பதை ஒத்திவைத்தனர்.