இந்தியா

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இந்திய குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை அந்நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காஷ்மீர் ஊடுருவல் தொடர்பாக பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிதை மத்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்துக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் வரவழைத்தார். அப்போது தீவிரவாதி பகதூர் அலி பிடிபட்டதை சுட்டிக்காட்டி எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து பாகிஸ்தான் துணை தூதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை ஏற்பதற்கில்லை. பாகிஸ்தான் மண் பயங்கரவாத செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடுக்க நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். இந்திய குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது. குற்றச்சாட்டு தொடர்பான தகவல் திரட்டப்படும்" என்றார்.

காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான்வானி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் காஷ்மீர் விடுதலைப் போராட்ட தியாகி என்று பாகிஸ்தான் அரசு அறிவித்து கருப்பு தினம் அனுசரித்தது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT