இந்தியா

அருணாச்சல் முதல்வராக பேமா காண்டு பதவியேற்றார்: நாட்டிலேயே இளமையான முதல்வர்

பிடிஐ

அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பேமா காண்டு நேற்று பதவியேற்றார். சவுனாமீன் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இடாநகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ததாகடா ராய், இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் முதல்வர் நபம் துகி, கலிகோபுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அருணாச்சலப் பிரதேச முதல்வராக கடந்த வாரம் மீண்டும் பொறுப்பேற்ற நபம் துகி, நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க இருந்த கடைசி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் மகனான பேமா காண்டுவை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தினார். காங்கிரஸில் அதிருப்தி எம்எல்ஏக்களாக இருந்த 30 பேரும், அவர்களுக்கு தலைமையேற்றிருந்த முன்னாள் முதல்வர் கலிகோபுல்லும் பேமா காண்டுவை ஆதரித்தனர்.

இதன் மூலம், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பேமா காண்டு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 45 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேச்சைகள் என மொத்தம், 47 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமைகோரினார்.

இதைத்தொடர்ந்து மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்ட, 37 வயது பேமா காண்டு, நாட்டிலேயே இளமையான முதல்வர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மொத்தம் 60 இடங்கள் கொண்ட சட்டப்பேரவையில் 47 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதால், பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் மீண்டும் தக்கவைத்துள்ளது.

SCROLL FOR NEXT