டெல்லி-மதுரா ரயிலில் முஸ்லிம் சகோதரர்களை வசைபாடி ஜுனைத் என்ற 17 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த நாட்டை உலுக்கிய சம்பவத்தில் டெல்லி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவு இன்ஸ்பெக்டரான இன்னொரு அரசு ஊழியர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
ஹரியாணா போலீஸ் ரமேஷ் என்ற ஒருவரை சம்பவம் நடந்து முடிந்த பிறகு கைது செய்தது.
இன்று கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் ஜுனைத்தையும் அவரது சகோதரரையும் பசுமாமிசம் உண்பவர் என்றும் தேச விரோதி என்றும் திட்டியதோடு தாக்கியுள்ளனர். ஆனால் ஜுனைத்தையும் அவரது சகோதரரையும் கத்தியால் குத்திய அந்த நபர் இன்னமும் பிடிபடவில்லை.
ரயிலில் அத்தனை பேர் பயணம் செய்தும் ஒருவர் கூட இதில் சாட்சி சொல்ல வரவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர், இதனால் கொலையாளியைக் கண்டுபிடிப்பது கடினமாகியுள்ளது.
ஜுனைத் கொலை நாடு முழுதும் எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது. கும்பலாகத் தாக்கிக் கொலை செய்வதற்கு எதிராக நாட் இன் மை நேம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ஜுனைத் கொலை சம்பவம் மிகவும் வேதனையை அளிக்கிறது, வெட்கக் கேடானது” என்று கண்டித்துள்ளார்.