இந்தியா

காமன்வெல்த் மாநாடு: பிரதமர் வியாழக்கிழமை முடிவு?

செய்திப்பிரிவு

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்ல்வெத் மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நாளை (வியாழக்கிழமை) முடிவெடுப்பார் என டெல்லி மேலிட வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு நிலவும் சூழலில், கடந்த வாரம் இது குறித்து காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

அதேவேளையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக பிரதமர் தான் இறுதி முடிவை எடுப்பார் என்று காங்கிரஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் பகிரங்கமாகவே வலியுறுத்தி வருவதும் இங்கே கவனத்துக்குரியது.

அதேவேளையில், இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி, பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான சுதர்சன நாச்சியப்பன் கூறிவருகிறார்.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்மாநாட்டில் கலந்துகொண்டால், அதன் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸுக்கு திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்ல்வெத் மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நாளை முடிவெடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT