நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களின் பட்டமளிப்பின் போது மாணவர்கள் வகுப்புகளுக்கு வேஷ்டி அணிந்து வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து எல்லா மாநிலங்களுக்கும், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் ஆதரவு பெற்ற அமைப்பான சிக்ஷா சன்ஸ்கிரிதி உதான் நியாஸ் கடிதம் எழுத உள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் செயலாளரான அத்துல் கோத்தாரி கூறுகையில், ‘நாடு சுதந்திரம் பெற்று 69 வருடங்கள் ஆனபின்பும் நாம் மேற்கத்திய பாணியில் கவுன் மற்றும் தொப்பிகளை அணிகிறோம். இதற்கு பதிலாக நம் நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டியை பட்டம் அளிக்கும் முக்கிய விருந்தினர்கள் மற்றும் அதை பெறும் மாணவர்கள் அணிய வேண்டும். அல்லது குர்தா மற்றும் பைஜாமாவையும் அணியலாம்.
பேண்ட் மற்றும் சட்டையை அணிவதையும் மாணவர்கள் நிறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி அனைத்து மாநில அரசுகள், பல்கலைக்கழகங்களில் வேந்தர்களான ஆளுநர்கள், ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுத உள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் ஆதரவு பெற்றதாக இருப்பது இந்த சிக்ஷா சன்ஸ்கிரிதி உதான் நியாஸ். இதன் தலைவரான தீனாநாத் பத்ரா ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி வருபவர் ஆவார்.
இதற்கு முன் ராஜஸ்தான் ஆளுநராக இருக்கும் கல்யாண்சிங்கும் இதே போன்ற ஒரு கருத்தை கூறி இருந்தார். இவர், பாஜக சார்பில் உபியின் முதல் அமைச்சராக இருந்தவர். இத்துடன் வரலாற்றுப் பாட நூல்களையும் மாற்றி எழுத வேண்டும் என சிக்ஷா சன்ஸ்கிரிதி உதான் நியாஸ் மத்திய அரசை வலியுறுத்த இருப்பதாகவும் கூறி உள்ளது.