நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பான நிலையறிக்கையை, அக்டோபர் 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அந்த விசாரணை நிலையறிக்கையில், 13 வழக்குகளின் விசாரணை நிலை, கடைசியாக பதியப்பட்டுள்ள குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, ஏஎம்ஆர் அயர்ன் அண்டு ஸ்டீல், ஜே.எல்.டி. யவாத்மால் எனர்ஜி, வினி அயர்ன் அண்டு ஸ்டீல் உத்யோக், ஜெ.ஏ.எஸ் இன்ஃபிராஸ்டிரக்சர் கேபிடல் பிரைவேட் லிமிடெட், விகாஸ் மெடல்ஸ், கிரேஸ் இண்டஸ்ட்டிரீஸ், ககன் ஸ்பாஞ்ச், ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர், ரதி ஸ்டீல் அண்டு பவர் லிமிடெட், ஜார்க்கண்ட் இஸ்பட், கிரீன் இன்ஃபிராஸ்டிரக்சர், கமல் ஸ்பாஞ்ச், புஷ்ப் ஸ்டீல், ஹிண்டால்கோ ஆகிய 14 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குகள் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணை விவரங்களையும், நிலக்கரித்துறை அமைச்சகத்தில் காணாமல் போன கோப்புகள் தொடர்பான விசாரணை விவரங்களையும் சிபிஐ தாக்கல் செய்யவுள்ள நிலையறிக்கையில் தெரிவிக்கப்படும்.
மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருக்கக் கூடும் எனக் கருதப்படும் இந்த வழக்குகளின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.