இந்தியா

சாதி அடிப்படை இடஒதுக்கீடு ரத்தை பரிசீலிக்கும் தருணம் வந்துவிட்டது: வி.ஹெச்.பி.

நிஸ்துலா ஹெப்பர்

சாதி அடிப்படை இடஒதுக்கீடு ரத்தை பரிசீலிக்கும் தருணம் வந்துவிட்டது என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

ஓர் இளைஞர், ஒரு மாபெரும் பேரணி, ஓரிரு நாட்களில் இந்த நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளன. ஆம், 22 வயது இளைஞர் ஹர்திக் படேல் தான் சார்ந்த படேல் சமூகத்தை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இப்படி ஒரு போராட்டம் திடீரென வெடித்துள்ள நிலையில், இடஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நீண்ட நாள் கோரிக்கை கவனம் பெறுகிறது.

இடஒதுக்கீடு குறித்த தங்களது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலாலர் சுரேந்திரா ஜெயின் அளித்த பேட்டியில், "இடஒதுக்கீடு பிரச்சினையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு நிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை.

இந்திய அரசியலமைப்பை கட்டமைத்தவர்களுக்கும் இடஒத்துக்கீடு குறித்து இதே நிலைப்பாட்டுடன் தான் இருந்திருக்கின்றனர். முதலில் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிட்டு பின்னர் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அவர்கள் வழிகாட்டுதலாக இருந்தது.

தற்போது, குஜராத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை உற்று நோக்கும்போது, உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு ஆணையம் அமைத்து இடஒதுக்கீடு ஏன் தேவை எங்கு தேவை என்பன குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவே தோன்றுகிறது. இடஒதுக்கீடு என்பதை பொருளாதாரத்தின் பின் தங்கியவர்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் வடிவமைக்கலாம்.

இட ஒதுக்கீடு கோரி ஓரிடத்தில் நடைபெறும் போராட்டம் மற்றொரு இடத்துக்கும் பரவும். உ.பி.யில் ஜாட் சமூகத்தினரும், ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவரும் போராட்ட களத்தில் குதிப்பர்.

இடஒதுக்கீடு சர்ச்சையை அதிகப்படியான சமூகத்தினர் கிளப்பும்போது, அதை தீவிரமாக பரிசீலிப்பது அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடஒதுக்கீடு போராட்டங்கள் மீது தான் நம் நாட்டின் கட்சிகள் அரசியலை வளர்க்கின்றன" என்றார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவுடன், ஹர்திக் படேல் தோன்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் உலா வரும் நிலையில், தங்கள் அமைப்புடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சுரேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.

பாஜக எம்.பி. கருத்து:

இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக எம்.பி. சி.டி.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், "இடஒதுக்கீட்டு பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு எதிர்காலத்தில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT