ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை தேடித்தந்த பிரச்சார வேன், இரண்டாவது முறையும் அகிலேஷ்சிங் யாதவிற்கு பலன் அளிக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
சண்டிகரில் இருந்து 31 கி.மீ தொலைவில் பஞ்சாபில் உள்ளது லால்ரூ எனும் இடம். இங்கு ஜே.சி.பி.எல் எனும் நிறுவனம் உள்ளது. இது, தம் வசதிகளுக்கு ஏற்றவாறு கார், வேன் மற்றும் பேருந்துகளை அமைத்து அதன் மேற்பகுதியை உருவாக்கும் நிறுவனம் ஆகும்.
இங்கு கடந்த 2004-ல் ஹரியானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டி காங்கிரஸின் பூபேந்தர்சிங் ஹுட்டா, ஒரு வேனை வடிவமைத்தார். அடுத்து 2007 மற்றும் 2012-ன் பஞ்சாப் தேர்தலில் அகாலிதளம் கட்சியின் பிரகாஷ்சிங் பாதல், 2014-ல் ஆந்திராவின் தெலுங்குதேசம் கட்சியின் சந்திரபாபு மற்றும் தெலுங்கானாவின் ராஷ்ட்ரிய தெலுங்கானா கட்சியின் கே.சந்திரசேகர ராவ் மற்றும் 2012-ல் உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் ஆகியோர் பிரச்சார வேனை வடிவமைத்தனர்.
இவர்கள் அனைவருக்கும் வெற்றி கிடைத்து தன் மாநில முதல்வர்களாகப் பதவியில் அமர்ந்தார்கள். இவர்களில் அகிலேஷ் 2017 தேர்தலுக்காக மீண்டும் ஒரு வேனை வடிவமைத்தார். இதனால், இவருக்கு இரண்டாவது முறையும் முதல்வராக அமர வாய்ப்பு கிடைக்கும் என ஒரு நம்பிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து ராஜிந்தர் அகர்வால் கூறுகையில், ''மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலான இந்த வேனை நான் வடிவமைத்துக் கொடுத்தேன். என்னிடம் இதை வாங்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, அகிலேஷும் இந்தமுறை மீண்டும் வெற்றி பெறுவார் என நம்பிக்கை எழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டம் என நான் நம்பவில்லை. ஆனால், எனது வாடிக்கையாளர்கள் கேட்ட அனைத்து வசதிகளையும் அந்த வேனில் நான் செய்து கொடுத்திருக்கிறேன்'' எனத் தெரிவித்தார்
கடந்த 2012-ல் அகிலேஷ் பயன்படுத்திய பிரச்சார வேன் மீண்டும் அவருக்குத் தேவையான வசதியில் வடிவமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் செலவு சுமார் ஐந்து கோடி ரூபாய் ஆகும். 'விகாஸ் ரத்(வளர்ச்சி ரதம்)' எனப் பெயரிடப்பட்ட சிகப்பு நிறப் பிரச்சாரப் பேருந்தில் அகிலேஷ் உ.பி. முழுவதிலும் பயணம் செய்தார்.
பிறகு, காங்கிரஸுடன் ஏற்பட்ட கூட்டணியால் அதை வெள்ளை நிறமாக்கி, 'உ.பி.க்கா விஜய் ரத்(உ.பி.யின் வெற்றி ரதம்)' எனப் பெயரிட்டார். இதுபோல், வேனில் பிரச்சாரம் செய்யும் பழக்கம் அகிலேஷின் தந்தையான முலாயம்சிங் யாதவ் சுமார் 30 வருடங்களுக்கு முன் துவக்கி இருந்தார். இதற்காக அவருக்கு ஹரியானாவின் முன்னாள் முதல்வரான தேவிலால் பிரச்சார வேனை பரிசாக அளித்திருந்தார்.
அகிலேஷ் பயன்படுத்திய வேனில் 4ஜி வைபை, நவீன சமையலறை, எல்ஈடி டிவி மற்றும் மேடைப்பேச்சு வசதி உட்பட சகலமும் அமைந்திருந்தது. இன்றுடன் முடிவடைந்த உ.பி.யின் ஏழுகட்ட தேர்தலின் முடிவுகள் வரும் 11-ம் தேதி சனிக்கிழமை வெளியாக உள்ளது.