இந்தியா

அமெரிக்காவில் தற்கொலை செய்த பொறியாளர்: மதுகர் மனைவி தற்கொலை முயற்சி

என்.மகேஷ் குமார்

அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட தெலங்கானா பொறியாளர் மதுகரின் மனைவி துக்கம் தாங்க முடியாமல் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தெலங்கானா மாநிலம், யாத்கிரிகுட்டா மண்டலம், ராள்ள ஜனகாமா கிராமத்தை சேர்ந்தவர் கூடூரு மதுகர் ரெட்டி. இவர் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தனது மனைவி ஸ்வாதி மற்றும் 7 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 4-ம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

மதுகர் ரெட்டியின் சாவிற்கு அவரது மனைவி ஸ்வாதி தான் காரணமென கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊரில் நடந்த இறுதிச் சடங்கில் ரெட்டியின் உறவினர்கள் ஸ்வாதியை பங்கேற்கவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதன் பின், ஹைதராபாத் திரும்பிய ஸ்வாதி நேற்று திடீரென துக்கம் தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT