இந்தியா

இரண்டாவதும் பெண் குழந்தை: 4 மாத சிசுவை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்

ஆர்.ஷபிமுன்னா

இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், பெற்ற தாயே அந்த குழந்தைக்கு எமனாக மாறினார். பிறந்து 4 மாதங்களே ஆன அந்த பெண் சிசுவை இரக்கமின்றி சமையல் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 15 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் தாய் நேஹாவை (35) போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜெய்ப்பூரின் செல்வந்தர்கள் வாழும் காலனிகளில் ஒன்று சாஸ்திரி நகர். இங்குள்ள ஒரு வீட்டில் கடந்த ஆகஸ்ட் 26-ல் 4 மாத கைக்குழந்தை கொல்லப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வீட்டில் பழுதாகிக் கிடைந்த ஏசி இயந்திரத்தின் உள்ளே அக்குழந்தையின் உடல் கத்தியில் குத்தப்பட்டு கிடந்தது. இதற்காக, அவரது குடும்பத்தின் சொந்தங்கள் 35 பேரிடம் ஜெய்பூர் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அக்குழந்தையின் தாயான நேஹா கோயல், சமையல் கத்தியால் குழந்தையை குத்திய காயங்கள் 17 இடங்களில் இருப்பது தெரிய வந்தது. இதற்காக, நேஹாவை நேற்று இரவு கைது செய்த போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் 2 நாட்களுக்காக அவர் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து அந்த வழக்கை விசாரித்து வரும் ஜெய்ப்பூர் வடக்குப் பகுதி துணை ஆணையரான அன்ஷுமன் போமியா கூறுகையில், 'ஆண் குழந்தை வேண்டும் என விரும்பியவருக்கு இரண்டாவது குழந்தையாக பெண் பிறந்தது நேஹாவிற்கு பிடிக்கவில்லை. இதனால், அவர் ஏற்கெனவே ஒருமுறை அக்குழந்தையின் கழுதை நெரித்து கொல்ல முயன்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குழந்தை தப்பியது இதற்கு ஆதாரமாக குழந்தையின் ரத்தக்கறை நேஹாவின் நகங்களில் இருந்தது' எனக் கூறியுள்ளார்.

டெல்லியை சேர்ந்த நேஹா அங்குள்ள ஒரு பிரபல கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு 8 வயதில் ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது ஆண் குழந்தை பெற வேண்டி நேஹா பல ஜோசியர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனையில் சில பூஜைகளும் வீட்டில் செய்துள்ளார். ஆண் குழந்தையை பெறும் முறைகளில் தன் வீட்டுக் கம்யூட்டரின் இணையதளங்களிலும் நேஹா தேடி இருப்பது போலீஸார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் நேஹாவின் காலனிவாசிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இதற்கு மிக அதிகமானக் கல்வி அறிவு பெற்றதாக நேஹாவின் குடும்பம் இருப்பது காரணம் ஆகும். இந்த சம்பவத்தில் நேஹாவின் கணவர் மற்றும் உறவினர்களையும் நம்ப முடியாதபடி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

.

SCROLL FOR NEXT