இந்தியா

கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக லாரிகளை காப்பாற்றிய போலீஸ்

செய்திப்பிரிவு

தமிழ் படப்பிடிப்பு ரத்து

மைசூருவில் திரைப்பட படப்பிடிப்புக்காக முகாமிட்டிருந்த தமிழ்த் திரையுலகத்தினரையும் கன்னட அமைப்பினர் நேற்று முற்றுகையிட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. பின்னர் போலீஸார் விரைந்து வந்து கன்னட அமைப்பினரை கைது செய்தனர்.

தமிழக லாரிகளை காப்பாற்றிய போலீஸ்

கர்நாடகாவில் தமிழக வாகனங்களை கன்னட அமைப்பினர் தேடித் தேடி தீயிட்டு கொளுத்தியதால், பல்வேறு இடங்களில் சிக்கிக் கொண்ட லாரி ஓட்டுநர்கள் அச்சம் அடைந்தனர். அவர்களில் ஒரு சிலர் போலீஸாரை தொடர்பு கொண்டு உதவிக் கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு போலீஸார் ஓசூர் வரை உரிய பாதுகாப்பு வழங்கி பத்திரமாக தமிழகம் அனுப்பி வைத்தனர்.

செல்வி வீடு முற்றுகை

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில், வதரஹள்ளி கிராமத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் பண்ணை வீடு உள்ளது. நேற்று இந்த வீட்டை முற்றுகையிட்ட ஜெய் கர்நாடகா அமைப்பினர் அங்கிருந்தவர்களை மாநிலத்தை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் முற்றுகையிட்ட கன்னட அமைப்பினரை கைது செய்தனர். மேலும் செல்வியின் வீட்டு முன் பாதுகாப்புக்காக 30 போலீஸாரும் நிறுத்தப்பட்டனர்.

அவசர உதவிக்கு அழையுங்கள்

பாதிக்கப்பட்ட மக்கள் அவசர உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளும்படி அரசு அறிவித்துள்ளது. இதே போல் வாட்ஸ் அப்பில் 9480801000 என்ற எண்ணிலும், ட்விட்டரில் @BlrCityPolice என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT