இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் ரூ.63.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
பழைய கப்பல்களை வாங்கி உடைத்து அதன் பாகங்களை விற்பனை செய்யும் ஐபி கமர்சியல்ஸ் தனியார் நிறுவனம் இக்கப்பலை வாங்கியுள்ளது.
பிரிட்டனிடம் இருந்து 1957-ம் ஆண்டு இந்தியா இக்கப்பலை வாங்கியது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இக்கப்பல் முக்கியப் பங்கு வகித்தது. 1997-ம் ஆண்டு கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றது.
பிரிட்டனிடம் இருந்தபோது எச்எம்எஸ் ஹெர்குலஸ் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு வாங்கப்பட்டபின் பெயர் மாற்றப் பட்டது.
இக்கப்பலுக்கு கடற்படையில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்ட பின்பு, 2013-ம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு விமானம் தாக்கி போர்க் கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என்று பெயரிடப்பட்டது.
பழைய கப்பலை வாங்கியுள்ள ஐபி கமர்சியல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தஸ்லிம் பவாஸ்கர் கூறுகையில், "இக்கப்பல் ஏலத்துக்கு வருகிறது என்று தெரிந்தவுடன், நாங்களும் அதனை வாங்க முன்வந்தோம். இந்தியாவின் முதன்மையான கப்பல்களில் இதுவும் ஒன்று, மும்பை துறைமுகத்தில் இருந்து 15 நாள்களுக்குள் இந்தக் கப்பலை எடுத்துச் சென்றுவிடுவோம். பின்னர் அதனை உடைத்து பாகங்களை தேவைக்கு ஏற்ப விற்பனை செய்வோம்" என்றார்.
சரித்திரப் புகழ் வாய்ந்த கப்பலை தனியாருக்கு விற்பனை செய்துள்ளது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதில் இக்கப்பலை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருந்தது. ஆனால் அதற்கு ரூ.500 கோடி அளவுக்கு செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. எனவே தேச நலன் கருதி கப்பலை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இக்கப்பலை விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும், அதனை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டுமென்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இது சாத்தியமில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததை அடுத்து அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பின்னர் ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அதிக விலை கொடுக்கும் நபருக்கு கப்பலை விற்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்து, அதனை செயல் படுத்தியுள்ளது.