இந்தியா

பெங்களூருவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

செய்திப்பிரிவு

க‌டந்த டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் பெங்களூரு எம்.ஜி. சாலையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மர்ம நபர்கள் 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். கடந்த 1-ம் தேதி அதிகாலையில் கம்மன ஹள்ளியில் தெருவில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்த சிசிடிவி வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. பெங்களூரு வில் உள்ள கே.ஜி.ஹள்ளியை சேர்ந்தவர் ரெஹானா ( பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 24 வயதான‌ இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி வருகிறார். நேற்று முன் தினம் காலை 6.30 மணியளவில் ரெஹானா வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டார். ஹெச்.பி.ஆர். லே அவுட் பகுதியில் உள்ள‌ தெருவில் சென்று கொண்டிருந்த போது குல்லா அணிந்த‌ மர்ம நபர் அவரை பின்தொடர்ந்துள்ளார்.

ரெஹானா அருகில் திடீரென வந்த அவர் வலுகட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது கூச்சலிட்ட ரெஹானாவை தாக்கியும் உள்ளார். அருகில் இருப்பவர்கள் ஓடி வந்தன‌ர். அச்சமடைந்த மர்ம நபர் ரெஹானாவை கடித்து விட்டு தப்பியோடியுள்ளார். இதனால் ரெஹானாவுக்கு முகம், கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஹெச்.பி.ஆர். லே அவுட் பகுதியில் வீடுகள், பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான‌ காட்சிகளை சேகரித்தனர்.

இந்த சம்பவத்தில் காய மடைந்த ரெஹானா அம்பேத்கர் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT