மதங்கள் மீதான அனைத்து விமர்சனங்களும் கிரிமினல் குற்றமாகாது என கிரிக்கெட் வீரர் தோனி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மதங்கள் மீதான விமர்சனம் எப்போது குற்றமாகும் என்பதை உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது. அதன்படி உள்நோக்கம் ஏதுமில்லாமல் பிறருக்கு எவ்வித கேடும் செய்யாத வகையில் மதங்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் கிரிமினல் குற்றமாகாது. உள்நோக்கத்தோடு, திட்டமிட்டு மதங்கள் மீது பரப்பப்படும் அவதூறும் விமர்சனமுமே கிரிமினல் குற்றமாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு பின்னணி:
பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியை இந்துக் கடவுள் விஷ்ணு போல் சித்தரித்த படம் வெளியாகியிருந்தது. இதில் தோனியின் பல கைகளில் அவர் விளம்பரம் செய்யும் பொருட்களுடன் ஷூவும் இருந்தது. இந்த அட்டைப்படமே சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர் மற்றும் தோனி ஆகியோர் மீது இந்து மதத்தை அவதூறு செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இதில் தோனி மீது சட்டப்பிரிவு 295-ஏ-வின் கீழ் குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தோனி கிரிமினல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இத்தகைய உணர்வுபூர்வ வழக்குகள் விசாரணைக்கு வரும்போது அதை நீதிமன்றங்கள் கவனமாக கையாள வேண்டும் என சட்டப்பிரிவு 295-ஏ சுட்டிக்காட்டியுள்ள அனைத்தும் பொருந்தும் வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் நடந்திருந்தால் மட்டுமே அவர் மீது மதத்தை அவமதித்ததாக கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.
இதற்காக, உத்தரப் பிரதேச மாநிலம் Vs ராம்ஜி லால் மோடி வழக்கில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இபிகோ 295-ஏ சட்டப்பிரிவின்படி, திட்டமிட்ட, கேடு விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமையும் வகையில் பேசுவது, எழுதுவது, குறியீடுகள் வெளியிடுவது, புகைப்படம் வெளியிடுவது உள்ளிட்டவை கிரிமினல் குற்றமாகும்.