இந்தியா

கோவை உள்ளிட்ட 8 இடங்களில் மெகா உணவுப் பூங்கா: முதற்கட்ட அனுமதி வழங்கியது மத்திய அரசு

செய்திப்பிரிவு

கோவை உள்ளிட்ட 8 இடங்களில் மெகா உணவுப் பூங்கா தொடங்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளது. இறுதிக்கட்ட அனுமதி பெற்ற 15 மெகா உணவுப் பூங்காக்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

நாடு முழுவதிலும் விவசாயிகள் பலனடையும் வகையில் 42 மெகா உணவுப் பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தனியார் நிறுவனங்களால் அமைக்கப்படும் இவற்றுக்கு தலா ரூ.50 கோடி வரை மானிய உதவி அளிக்க மத்திய அரசு முன்வந்தது. இதன் அடிப்படையில் இதுவரை 9 மெகா உணவுப் பூங்காக்கள் அமைக்கப் பட்டு, செயல்பாட்டில் உள்ளன. கடைசியாக யோகா குரு ராம்தேவ் நிறுவனம் சார்பில் பதஞ்சலி உணவு மற்றும் மூலிகை உணவுப் பூங்காவானது உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம், ஹரியாணா, தெலங்கானா, நாகா லாந்து, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 8 உணவுப் பூங்காக்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு முதற்கட்ட அனுமதி அளித்தது.

தமிழகத்தில் இது, கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா, அக்கரை செங்கப்பள்ளி கிராமத்தில் அமைய உள்ளது. இதை கொல்கத்தாவை தலைமை யிடமாகக் கொண்ட ‘ரத்னாத்ரே மெகா புட்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் அமைக்க உள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “எங்கள் விளம்பர அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு மெகா உணவுப் பூங்கா அளிக்க முதற்கட்ட அனுமதி அளிக்கிறோம். அவர்கள் மற்ற கட்டமைப்பு பணிகளைப் பூர்த்தி செய்த பிறகு, இறுதிக்கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. முதற்கட்ட அனுமதி பெறும் பல நிறுவனங்கள் அடுத்த நிலையை எட்டவில்லை எனில், இந்த வாய்ப்பு வேறு நிறுவனத்துக்கு மாற்றித் தரப்படுகிறது. இந்த வாய்ப்பை புதிதாகப் பெறும் நிறுவனம் நாட்டின் எந்த இடத்திலும் மெகா உணவுப் பூங்கா தொடங்கலாம். இதுபோல் தருமபுரியில் முதற்கட்ட அனுமதி பெற்ற ஒரு நிறுவனம் அடுத்தக்கட்டத்தைப் பூர்த்தி செய்யாததால் அந்த திட்டம் கடந்த 2016, மார்ச் 11-ல் ரத்தானது” என்று தெரிவித்தனர்.

இதனிடையே கடந்த ஏப்ரலில் முதற்கட்ட அனுமதி பெற்ற 8 தனியார் நிறுவனங்கள், அடுத்தக்கட்ட பணியை பூர்த்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே அடுத்தக்கட்ட பணிகளைப் பூர்த்தி செய்த 15 நிறுவனங்களுக்கு இறுதிக்கட்ட அனுமதியை மத்திய உணவுப் பதப்படுத்தும் அமைச்சகம் அளித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இவை விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மெகா உணவுப் பூங்கா அமைக்கப்பட்டு விட்டது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தலா ஒன்று செயல்பாட்டில் உள்ள நிலையில், தெலங்கானாவில் 4-ம், கேரளாவில் 2-ம் இறுதிக்கட்ட அனுமதி பெற்றுள்ளன. உணவுப் பொருளைப் பதப்படுத்துவது, குளிர்வித்து பாதுகாப்பது உள்ளிட்ட வசதிகள் அடங்கிய மெகா உணவுப் பூங்காவால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 30,000 விவசாயிகள் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT