ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் கர்நாடக அதிமுக கட்சியினர் 8 பேர் சார்பில் ஜாமீன் உத்தரவாதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பிணையமாக நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஜாமீனில் வெளியே வந்தவர்கள் நீதிமன்றத்தின் நிபந்தனையை மீறினால் பிணையம் அளித்துள்ளவர்களின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும் என நீதிபதி குன்ஹா எச்சரித்தார்.
ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் 8 கோடி பிணையம் வழங்குபவர்களை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். ஜெயலலிதாவுக்கு பெங்களூரைச் சேர்ந்த பரத் என்பவர் பிணை வழங்குவதாக ஆவணங்களை தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தியின் மனைவி குணஜோதி இரண்டாவது பிணையம் அளித்தார். அதில் தனக்கு பெங்களூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் இருப்பதற்கான ஆவணத்தை பிணையமாக தாக்கல் செய்தார். இந்த இரண்டையும் நீதிபதி குன்ஹா ஏற்றுக்கொண்டார்.