பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரந்திர மோடிதான், கடந்த ஆறு மாதங்களில் தமது வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதி என்று கூகுள் இந்தியா குறிப்பிடுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தின், மோடியைதான் கூகுளில் இணையவாசிகள் மிகுதியான அளவில் தேடியுள்ளனர்.
அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு 6-வது இடம்
கூகுள் இந்தியாவில் ஆறு மாதங்களில் அதிகம் தேடப்பட்ட அரசியல் தலைவர்கள் பட்டியலில், தமிழக முதல்வர் ஜெயலலிதா 6-வது இடத்தில் உள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் 4-வது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் 5-வது இடத்திலும் உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ், பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் அடுத்தடுத்து அதிகளவில் கூகுளில் தேடப்பட்டவர்கள்.
கட்சிகளின் பெயர்கள் ரீதியாக பார்க்கும்போது, பாஜக முதலிடத்திலும், காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், ஆம் ஆத்மி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
வாக்காளர் அட்டை பெறுவது எப்படி?
வாக்காளர் அடையாள அட்டைப் பெறுவது எப்படி என்ற கேள்விதான், கூகுளில் இந்திய இணையவாசிகள் கடந்த 6 மாதங்களில் மிகுதியாக எழுப்பிய சந்தேகம்.
அதேவேளையில், இந்தியாவின் நகர்ப்புற வாக்காளர்கள் குறித்து கூகுள் இந்தியா ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதில், 42 சதவீத நகர வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு எடுக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றுவதில் பிரதமர் வேட்பாளருக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது என்று 11 சதவீதம் பேர் குறிப்பிட்டுள்ளதாக கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.