இந்தியா

பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளில் படிக்க குழந்தைகளை அனுப்ப வேண்டாம்: இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

‘‘பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தங்கள் குழந்தைகளை உள்ளூர் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம்’’ என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் ‘கறுப்பு தினத்தை’யும் அனுசரித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையில், கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘என்றாவது ஒருநாள் காஷ்மீர் பாகிஸ்தானாகும்’’ என்று பேசினார். இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘‘பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர், தூதரக அதிகாரிகள் உள்ளூர் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டாம்’’ என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் நேற்று கூறும்போது, ‘‘பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தங்கள் குழந்தைகளை இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பி வைக்கலாம். அல்லது அவர்களும் இந்தியாவுக்கு திரும்பி வந்துவிடலாம்’’ என்றனர்.

அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘‘பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய அதிகாரிகள் யாரும் தங்கள் குழந்தைகளை உடன் வைத்திருக்க கூடாது. இதை பாகிஸ்தானில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள அதிகாரிகளும் மனதில் கொள்ள வேண்டும்’’ என்றனர். எனினும், அதிகாரிகள் தங்கள் மனைவி அல்லது கணவனுடன் பாகிஸ்தானில் தங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கன் பள்ளியில், இந்திய தூதரக அதிகாரிகளின் குழந்தைகள் 50 பேர் படிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எல்லா நாடுகளும் தூதரகபணிகளை பொறுத்த வரை சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை அவ்வப்போது எடுக்கின்றன. இது வழக்கமானதுதான். தற்போதைக்கு பாகிஸ்தானுக்கு வெளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று இந்திய தூதரக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.

காஷ்மீர் வன்முறைகளை கண்டித்து பாகிஸ்தானில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து, அங்கிருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT