பாஜக தலைவர் அமித் ஷா கேரளாவின் முக்கியப் பண்டிகையான ஓணத் திருவிழாவுக்கு, வாமன ஜெயந்தி வாழ்த்துக் கூறியுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
அமித் ஷா தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், புராண வாமன அவதாரம் தன் இடது காலை மகாபலியின் தலை மீது அமிழ்த்தி, அவரை பாதாளத்துக்குள் அனுப்புவது போன்ற படத்தைப் பகிர்ந்து, கேரள மக்களுக்கு வாமன ஜெயந்தி வாழ்த்துக் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, 'மகாபலி மன்னனை அழித்த, மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமனரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விழா ஓணம். அறுவடைத் திருநாளில் மகாபலி மன்னனின் வருகையைக் கொண்டாடும் விழா அல்ல' என்ற பொருள்படும்படியான கட்டுரை மலையாள ஆர்.எஸ்.எஸ்.ஸில் வந்துள்ளது.
இதற்கு மலையாளிகள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சமூக விமர்சகர் சந்திரன், ''ஓணம் ஒரு காலத்தில் உயர் சாதியினர் கொண்டாடும் விழாவாக இருந்தது. பின்னாட்களில் அனைத்து வகுப்பு மக்களும் அதைக் கொண்டாடத் தொடங்கினர். இது கருப்பின மகாபலிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தது. இந்த மறுமலர்ச்சியைத்தான் சங்கப்பரிவாரங்கள் துவம்சம் செய்யப் பார்க்கின்றன'' என்றார்.
அமித் ஷாவின் பதிவைக் கடுமையாக மறுத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ''ஓணம் பண்டிகை எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்துகிறது. ஷா, தன்னுடைய பதிவை நீக்க வேண்டும் அல்லது மன்னிப்புக் கோர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ''ஷாவின் பதிவு, ஓணம் பண்டிகை உயர்சாதிக்கு மட்டுமானது என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. மகாபலியின் வருகையைக் கொண்டாடும் ஓணத்தின் வரலாற்றை மாற்றியமைக்க விரும்வும் அமித் ஷாவை கேரள மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
இச்சர்ச்சைகள் குறித்து விளக்கமளித்த கேரள மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன், ''கேரள மக்கள் வாமனரையும் வழிபட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள், கடவுள் வாமனரின் ஆலயமான திரிக்கக்கரா ஆலயத்தை வழிபடுகின்றனர். வாமன ஜெயந்தி என்பது ஓண வழிபாட்டின் கூடுதல் அம்சமே தவிர, அதற்கு எதிரானதல்ல'' என்று கூறியுள்ளார்.