புதுவையில் திருவாண்டார் கோவில், பத்துக்கண்ணு, துத்திப் பட்டு, அபிஷேகப்பாக்கம் ஆகிய 4 இடங்களில் அம்பேத்கர் சிலை களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதுவையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தோழமை கட்சிகள் சார்பில் தி.மு.க. மாநில அமைப்பாளர் சுப்பிரமணியன், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:
புதுவையில் சாதி மோதல் களைத் தூண்டி விடும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணைபுரியும் வகையில் புதுவை முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடும் சந்தேகம் அடைய வைத்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக பத்துக்கண்ணுவில் அம்பேத்கர் சிலை இருந்து வருகிறது. அப்போது எல்லாம் விதிமுறைகள் மீறி சிலை அமைக்கப்பட்டிருந்ததை அரசு அறியவில்லையா? இப்போது சிலையை அகற்ற வேண்டிய நோக்கம் என்ன? அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீதும், அப்புறப்படுத்தியவர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மதகடிப்பட்டில் ராமசாமி படையாச்சி சிலையை சேதப் படுத்தியதாகக் கூறும் பா.ம.க. அவருக்கு உரிய மரியாதையை செலுத்தியுள்ளதா? சமூகத்தின் அடித்தட்டு மக்களுக் காகப் போராடிய ராமசாமி படையாச்சியின் சிலையை இழிவுபடுத்தும் எண்ணம் விடுதலைச் சிறுத்தையினருக்கு துளியளவும் கிடையாது என்றார் திருமாவளவன்.
கல்வீச்சில் காவலர் காயம், பஸ் கண்ணாடி உடைப்பு
ஆர்ப்பாட்டம் ஏ.எப்.டி. மில் சாலையில் நடப்பதாக இருந்தது. ஆனால், ஆர்ப்பாட்டத்தை புதுவை பஸ் நிலையம் எதிரேயுள்ள மறைமலையடிகள் சாலையில் நடத்துமாறு காவல்துறையினர் கூறினர். இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இப்பகுதியில் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் அவ்வழியாக வந்த பேருந்து உரசியதால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் லேசான காயமுற்றார். இதனால் அப்பகுதியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் அப்பஸ்ஸின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் காவலர் ஒருவரும் காயமடைந்தார்.