12 மாநிலங்கள் எடுத்த அதிரடி நடவடிக் கையால் பதுக்கப்பட்ட 82 ஆயிரம் டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால், துவரம், உளுந்து பருப்புகளின் விலை நாடு முழுவதும் குறையத் தொடங்கி உள்ளது.
பருப்பு பதுக்கல் மீது நடவடிக்கை எடுக்க இதுவரை 8,394 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பருப்புகள் அடுத்தவாரம் முதல் சந்தையில் கிடைக்கும் என மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இதனால், விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சக தகவலின்படி சில்லறை விலையில் கிலோ ரூ. 210க்கு விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு ரூ.190-க்கு விற்பனையாகிறது.
மொத்த விற்பனை விலை ரூ.181 ஆக உள்ளது. உளுந்து விலை கிலோவுக்கு ரூ.8 குறைந்து சில்லறை விலையில் ரூ.190-க்கு விற்கப்படுகிறது. “நாடு முழுவதும் சுமார் 8,394 சோதனைகள் மூலம், 82 ஆயிரத்து 462.53 டன் பருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில மாநில அரசுகள் அரசு, கூட்டுறவு அமைப்புகள் மூலம் பருப்பு விற்பனையைத் தொடங்கியுள்ளன. மொத்த சந்தையில் பருப்பு விலை குறையத் தொடங்கியுள்ளது” என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் அதிகபட் சமாக 57,455 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த வாரம் மொத்த விலையில் கிலோ ரூ.200க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு தற்போது ரூ.152 ஆக குறைந்துள்ளது என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.