தெஹல்காவில் இருந்து தாற்காலிக நிர்வாக ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்த ஷோமா சௌத்ரி வீட்டு முன் பாஜக பிரமுகர் விஜய் ஜோலி கறுப்பு மை போராட்டம் நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, விஜய் ஜோலியையும், அவர் சார்ந்துள்ள பாஜகவையும் கடுமையாக விமர்சித்தும் ட்விட்டரில் இணையவாசிகள் கடும் கொந்தளிப்பான பதிவுகளை இட்டனர்.
இதனிடையே, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான விஜய் ஜோலி மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
டெல்லியில் உள்ள ஷோமா சௌத்ரி வீட்டு முன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்த விஜய் ஜோலி, தன்னிடம் இருந்த கறுப்பு மையால் வீட்டு வாசலில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையை அழித்தார். பிறகு, அதன் அருகில் 'குற்றம்சாட்டப்பட்டவர்' என கறுப்பு மையால் எழுதினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த வழக்கை ஷோமா மூடி மறைக்க முயன்றார். ஒரு பெண் பத்திரிகையாளருக்கு நடந்த கொடுமையை எதிர்த்து நான் இதை செய்துள்ளேன். பாரதிய ஜனதா கட்சி சார்பில் இதை நான் செய்யவில்லை. ஒரு இந்திய குடிமகனாக அமைதியான முறையில் இதை செய்ய உரிமை உள்ளது. இதற்காக என் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை சந்திக்க தயார்" என்றார்.
பாஜகவும் கண்டிப்பு
விஜய் ஜோலியின் இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் மட்டுமின்றி, அவர் சார்ந்துள்ள பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்தது.
இது பற்றி நிருபர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், விஜய் ஜோலி கட்சியின் உத்தரவை மீறி செய்தமைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலுக்காக நான் வருந்துகிறேன் என்றார்.
ட்விட்டரில் டாப்!
விஜய் ஜோலிதான் இன்று (வியாழக்கிழமை) ட்விட்டரில் முக்கியப் பேசுபொருள். #VijayJolly என்ற ஹேஷ்டேக் தான் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. அத்தனையும் அவரைக் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் இணையவாசிகள் இட்ட பதிவுகளே ஆகும்.