ஆதர்ஷ் குடியிருப்பு வளாக ஊழல் புகார் காரணமாக பதவி விலகிய மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாண், நான்டெட் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சவாண் கூறியதாவது:
ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. இது விஷயத்தில் மனசாட்சிப்படி நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் தூய்மையானவன். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியினர் அரசியலாக்குகிறார்கள்.
ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு தகுதியே இல்லை. சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் ரெட்டி சகோதரர்கள் பற்றிய தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை பாஜகவினர் தெளிவுபடுத்துவார்களா?
ஆதர்ஷ் விவகாரத்தில் என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்
பட்டிருந்தாலும் குற்றச் சாட்டு நிரூபிக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழக்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுவதை எந்த விதிமுறை யும் சட்டமோ தடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என 100 சதவீத நம்பிக்கை உள்ளது என்றார்.
ஊழல் எதிர்ப்பை மையமாக வைத்து தேர்தலை சந்திக்கப் போவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந் தார். இந்நிலையில், ஆதர்ஷ் ஊழல் புகாரில் சிக்கிய அசோக் சவாண் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என அக்கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஆதர்ஷ் ஊழல் புகார் காரண மாக, அசோக் சவாண் கடந்த 2010 நவம்பரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற பிருத்விராஜ் சவுகான், ஆதர்ஷ் விவகாரம் குறித்து விசாரிக்க நீதிக்குழுவை அமைத்தார். சவாண் விதிமுறைகளை மீறி தனது நெருங்கிய உறவினருக்கு குடியிருப்புகளை ஒதுக்கியதாக அக்குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.
எனினும் இந்த அறிக்கையை மகாராஷ்டிர அரசு ஏற்க மறுத்து விட்டது. பின்னர் ராகுல் காந்தி தலையிட்டு விசாரணை அறிக்கையை ஏற்க மறுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநில அமைச்சர வையை வலியுறுத்தி இருந்தார்.
இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சவாண், "கட்சித் தலைமை தெளிவான முடிவு எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை காத்திருங்கள். இந்த விவகாரத்தில் எது உண்மை, எது பொய் என்பதை தொகுதி மக்கள் வரும் தேர்தலில் முடிவு செய்யட்டும்" என்றார்.
‘‘அசோக் சவாணுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவு செய்துள்ளது. எனக்குத் தெரிந்தவரை சவாண் தேர்தலில் போட்டியிடுவதை எந்த சட்டமும் தடை செய்யவில்லை" என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்தார்.