இந்தியா

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் கவலை அளிக்கிறது: மோடி

செய்திப்பிரிவு

இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கவலை அளிப்பதாக, பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸின் ஆறாவது உச்சி மாநாடு, பிரேசிலின் போர்டலிசா நகரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், 'சர்வதேச ஆட்சி முறை மற்றும் மண்டல நெருக்கடிகள்' குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதன் விவரம்:

'மேற்காசிய நிலவரம், இந்த மண்டலத்திலும், உலக அளவிலும் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் 70 லட்சம் இந்தியர்களைப் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இராக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி பிரிக்ஸ் மாநாடு ஆராய வேண்டும். இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தர மறுத்து, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுகளுக்கு நாம் கூட்டாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, பன்னாட்டு நிதியம் போல் பன்னாட்டு நிறுவனங்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் ஆப்கானிஸ்தானுக்கு நாம் உதவ வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கான நிர்வாக, பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு அம்சங்களில் இந்தியா தொடர்ந்து தனது உதவிகளை வழங்கும்.

சிரியாவில் அமைதி ஏற்பட இந்தியா உதவும். இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கவலை அளிக்கிறது.

தீவிரவாதம் குறித்து பல்வேறு நாடுகள் பல்வேறு அளவுகோல்கள் வைத்திருப்பதால், அதற்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை.

உலக அளவில் இணையதள பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைய தளத்தை உலகப் பொது நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள சவால்களை சந்திப்பதில் பிரிக்ஸ் ஒன்றுபட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT