இந்தியா

ஜாதவ் சர்ச்சை எதிரொலி: பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை ரத்து

செய்திப்பிரிவு

வரும் ஏப்ரல் 17-ம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெறவிருந்த கடலோர பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

கடலோர பாதுகாப்பு, மீனவர்கள் பிரச்சினை, இருநாட்டு கடல் எல்லையில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை ஆகியன தொடர்பாக விவாதிப்பதற்காக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்புப் படையின் பிரதிநிதி குழு ஒன்று டெல்லி வரவிருந்தது. இந்திய கடலோர காவற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

இந்தியாவின் முன்னாள் கடற்படை கமாண்டர் குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் வேவு பார்த்ததாக அந்நாடு மரண தண்டனை விதித்துள்ளததன் எதிரொலியாகவே இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இந்திய தூதரகம் மூலம் 14 முறை பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கு பாகிஸ்தான் எவ்வித ஏற்பாடுகளையும் செய்யவில்லை.

இத்தகைய சூழலில்தான் ஏப்ரல் 17-ம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெறவிருந்த கடலோர பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT