இந்தியா

கேம்பகோலா குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை

செய்திப்பிரிவு

மும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கேம்பகோலா குடியிருப்புகளை இடிப்பதற்கு 2014ஆம் ஆண்டு மே 31ம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இன்று காலையில், உச்ச நீதிமன்றத்தால் சட்டவிரோதக் குடியிருப்பு என அறிவிக்கப்பட்ட கேம்ப கோலா அடுக்குமாடிக் குடியிருப்பை இடிக்கும் பணியில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். கேம்ப கோலா அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் வாயில் கதவை தகர்த்தனர். இதற்கு குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியது.

இதற்கிடையில், கேம்பகோலா குடியிருப்புகளை இடிப்பதற்கு குடியிருப்புவாசிகள் தெரிவித்த எதிர்ப்பு குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்து, உச்ச நீதிமன்றம் தானே முன் வந்து தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு:

கேம்பகோலா குடியிருப்புவாசிகளின் கடும் எதிர்ப்பை மீறி, மாவட்ட நிர்வாகம் இன்று வளாகத்தின் சுற்றுச் சுவரை இடிக்கத் துவங்கியுள்ளது. அதில் வசித்து வருவோர் வீடுகளை காலி செய்ய 7 மாத காலம் அவகாசம் அளிக்கும் வகையில், 2014ஆம் ஆண்டு மே 31ம் தேதி வரை இந்த குடியிருப்புகளை இடிக்க தடை விதித்து, உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT