உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், தற்போது தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், "கர்நாடக அரசு தமிழகத்துக்கு இரு தினங்களுக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. பாஜக சார்பில் மூத்த தலைவர்கள் ஜகதீஷ் ஷெட்டர், எடியூரப்பா, அனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஜகதீஷ் ஷெட்டர், "காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என முதல்வர் சித்தராமையாவிடம் வலியுறுத்தியுள்ளோம்.
குறைந்தபட்சம் நாளை (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெறவுள்ள இருமாநில முதல்வர்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் வரையிலாவது தண்ணீர் திறந்துவிட வேண்டாம் எனக் கோரியுள்ளோம். எங்கள் பரிந்துரையை முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்" என்றார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, "தற்போது அனைத்துக்கட்சி கூட்டம் மட்டுமே முடிந்துள்ளது. கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்துக்குப் பின்னரே காவிரி பிரச்சினையில் முடிவு எட்டப்படும்" எனக் கூறிச் சென்றார்.
மீண்டும் 144:
இதற்கிடையில், பெங்களூரு, மாண்டியா, மைசூரு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு வரும் 30-ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.