இந்தியா

அமெரிக்காவுக்கான தூதராக நவ்தேஜ் சிங் சர்னா நியமனம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக, நவ்தேஜ் சிங் சர்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பிரிட்டனுக்கான இந்திய தூதராக உள்ள இவர், விரைவில் புதிய பொறுப்பை ஏற்பார் என, வெளியுறவு விவகாரங்கள் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 1980-ம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சேர்ந்த நவ்தேஜ் சிங், பிரிட்டனில் தூதரகப் பணிக்குச் செல்லும் முன், வெளியுறவு அமைச்சகத்தில் செயலாளராக (மேற்கு) பணிபுரிந்தார். 2002 முதல் 2008 வரை வெளியுறவு செய்தித் தொடர்பாளராக இருந்தார்.

கடந்த 2008 முதல் 2012-ம் ஆண்டு வரை, இஸ்ரேலுக்கான இந்திய தூதராகவும், நவ்தேஜ் சிங் பணி புரிந்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் தற்போது பொறுப்பு வகிக்கிறார். அதிபர் தேர்தலுக்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், அந்நாட்டுக்கான புதிய தூதராக நவ்தேஜ் சிங் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான இருவழி வர்த்தகம், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்தாண்டில் 11 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது.

சரக்கு மற்றும் சேவைகள் வர்த்தகத்தை, 50 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு அதிகரிக்க இருநாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த சூழலில் இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளில், நவ்தேஜ் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT