மாநிலம் முழுதும் உள்ள 730 மது அருந்தகங்களை தடை செய்யும் கேரள அரசின் மதுபானக் கொள்கையின் பின்னால் எந்தவித தர்க்கமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்த அம்மாநில அரசு, ‘பார்’களை மூட உத்தரவிட்டது. ஐந்து நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டல்களில் மட்டுமே ‘பார்’ நடத்த அனுமதிக்கப்படும் எனக் கூறியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. கேரள அரசின் உத்தரவை எதிர்த்து 'பார்' உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர்.தவே, "மதுபான விடுதிகளின் தடையின் பின்னணியில் எந்த விதமான தர்க்கமும் இல்லை. எனக்கு மதுப்பழக்கம் கிடையாது, அப்படியிருந்தும் எனக்கும்கூட கேரள அரசின் இந்த முடிவில் தர்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை. “தரக்குறைபாடு” என்கின்றனர். ஆனால் தரம் மற்றும் தரமற்றது என்பதை எப்படி வேறுபடுத்துகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே தடை செய்யப்பட்ட மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் சார்பில் வழக்காடும் வழக்கறிஞர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
“இதன் மூலம் எதைச் சாதிக்க விரும்புகின்றனர்? மதுபானத்திற்குத் தடையையா? இல்லை. 5 நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும், கள்ளுக்கடைகள் இயங்கும், ஆனால் சில பார்கள் மட்டும் இயங்க முடியாது” என்று மூத்த வழக்கறிஞர் ஆர்யமான் சுந்தரம் கொதிப்படைந்து கேட்டுள்ளார்.
கேரள மாநிலம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வாதத்தை எதிர்த்து, மதுபான விடுதி உரிமையாளர்களுக்கான விற்கும் உரிமை அவர்களது அடிப்படை உரிமை அல்ல, அரசின் கொள்கை முடிவின் படி இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மதுபான விடுதி உரிமத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம் என்றார்.
மதுபான விடுதிகள் உரிமையாளர்கள் சார்பாக ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் ராஜீவ் தவான், “3, 4 அல்லது 5 நட்சத்திர விடுதிகள் என்ற வேறுபாடில்லாமல்தான் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே உரிமத்த்தின் கடைசி தினமான மார்ச் 31, 2015 வரை அவர்கள் விடுதிகளை நடத்த அனுமதி வழங்குவதே முறை” என்றார்.
மேலும், இந்த மதுபான விடுதிகளில் நிறைய பேர் பணியாற்றி வருகின்றனர். அரசின் இந்த மதுவிலக்குக் கொள்கையினால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர். இப்போது வெளியில் தெரிவது ஒரு சிறுதுளிதான். மேலும், இது மதுவிலக்குக் கொள்கையல்ல, சிலபல பார்கள் நடத்தப்படக்கூடாது என்று திட்டமிட்டுச் செயல்படுகிறது அரசு. குடிக்க விரும்புவர்கள் இப்போது கள்ளுக் கடைப் பக்கம் செல்லப் போகிறார்கள். இதில் கொள்கை என்று அரசு கூறுவது எதனை?
என்று மதுபான விடுதி உரிமையாளர்கள் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.