இந்தியா

பயிற்சி வழக்கறிஞரிடம் பாலியல் அத்துமீறியவர் நீதிபதி கங்குலி

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலிதான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என 3 நபர் குழுவிடம் பெண் பயிற்சி வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வழக்குரைஞர் கடந்த மாதம் புகார் கூறியிருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் இது நிகழ்ந்ததாகக் கூறிய அவரது புகார் குறித்து விசாரிப்பதற்காக 3 நபர் குழுவை சென்ற 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் அமைத்தது.

நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட இந்தக் குழு, தங்கள் விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திடம் அளிக்கப்பட்ட அந்த விசாரணை அறிக்கையில், புகார் கூறிய பெண் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியிருப்பது முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி என்பது தெரியவருகிறது.

முன்னாள் நீதிபதி கங்குலி அதிர்ச்சி

இந்த விசாரணை அறிக்கை தொடர்பான தகவல் வெளியானதும் பேட்டியளித்துள்ள முன்னாள் நீதிபதி கங்குலி, "என் மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதைக் கேட்டு நான் உடைந்து விட்டேன்.

இவை அனைத்தும் தவறானவை என 3 நபர் குழு முன்பு தெரிவித்துள்ளேன். எப்படி என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்று தெரியவில்லை. அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்படாதபோதும், அந்தப் பெண் என்னுடன் இணைந்து பணியாற்றினார்.

என்னுடன் இணைந்து பணியாற்றிய பயிற்சி வழக்குரைஞர் திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டதால், அந்தப் பணியை இந்தப் பெண் தொடர்ந்தார்" என்றார் கங்குலி.

முன்னதாக, கடந்த 2008, டிசம்பர் 17-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற கங்கூலி, 2012, பிப்ரவரி 3-ல் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT