இந்தியா

சர்வதேச விதிமுறைகளை மீறுகிறது காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகள்: அம்னெஸ்டி கண்டனம்

தாமினி நாத்

காஷ்மீரில் வன்முறைக்கு எதிராக பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகள் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை, கடுமையாகவும் அளவுக்கதிகமாகவும் உள்ளது என்று அம்னெஸ்டி அமைப்பு விமர்சனம் செய்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்பாட்டக்காரர்களில் சிலர் கற்களை வீசியும் போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பாதுகாப்புப் படையினர் இதற்கு எதிராக கடுமையான ஆயுதங்களைப் பிரயோகிக்கின்றனர், பெல்லட் துப்பாக்கிகள், கண்ணீர் புகைக் குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில் அனந்த்நாக் மாவட்டத்தில் செப்டம்பர் 10-ம் தேதியன்று பெல்லட் துப்பாக்கி காயத்திற்கு ஒருவர் பலியானார். பெல்லட் துப்பாக்கிகள் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களிலேயே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மட்டும் பெல்லட் துப்பாக்கிகளின் காயத்திற்கு 100 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்லட் துப்பாக்கிகள் அமைதியான முறையில் போராடுபவர்களையும் தாக்குகிறது. வீட்டினுள் இருக்கும் குழந்தைகளையும் இந்த பெல்லட் தோட்டாக்கள் தாக்கிக் காயப்படுத்துகின்றன.

சட்டம் ஒழுங்கு அமலாக்க அதிகாரிகளுக்கான ஐநா நடத்தை விதிமுறைகளின்படி, இத்தகைய ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் தங்கள் கடமையை ஆற்ற வேண்டியுள்ள நிலையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும், எனவே அளவுக்கதிகமாக கடுமையான ஆயுதப் பிரயோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை தேவை” என்று அம்னெஸ்டி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT