அசாம் மாநிலத்தில் குடியரசு தின விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பையும் மீறி 4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
சராய்தவ், சிவ்சாகர், திப்ருகர், தீன்சுகியா ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தாக்குதல்களில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
உல்பா தீவிரவாதிகளே இத்தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாகவும். தங்களது இருப்பை உணர்த்தும் விதமாகவே குடியரசு தினத்தன்று அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
திப்ருகார் மாவட்டத்தில், குடியரசு தின விழா நடைபெற்ற இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.