இந்தியா

திரும்பும் பக்கமெல்லாம் பன்றிகள்.. அசுத்தமாகும் சபரிமலை

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் சபரிமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஐயப்பனை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து அதிக அளவில் செல்கின்றனர். மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருந்து, புலால், மது, மாது என அனைத்தையும் தவிர்த்து, புறத்தூய்மை, மனத் தூய்மையுடன் தினந்தோறும் இருவேளை நீராடி, ஐயப்பனின் சரணங்களைச் சொல்லி வழிபாடு நடத்தி, பின்னர் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்கச் செல்கின்றனர்.

சபரிமலையில் மண்டல பூஜை, மகர பூஜை தவிர அனைத்து தமிழ் மாதங்களிலும் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கோயில் நடை திறக்கப்படுவதால், மண்டல பூஜை மற்றும் மகர பூஜை காலங்களில் ஒரே நேரத்தில் பக்தர்கள் கூட்டம் குவிவது தவிர்க்கப்படுகிறது. மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் காலங்களிலும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி, அக்டோபர் 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டு, 21-ம் தேதி இரவு 10 மணிக்கு சாத்தப் பட்டது. நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து ஐயப்பனை வழிபட்டுச் சென்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமை வந்த பக்தர்கள் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏராளமான பக்தர்கள் வந்துசெல்லும் புனிதத் தலமான சபரிமலையில் பக்தர்க ளுக்குத் தேவையான வசதிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் பக்தர்களின் குமுறலாக உள்ளது. ஐப்பசி மாத பூஜையின் போதும், பம்பையில் தொடங்கி சபரிமலை வரை தூய்மை பேணப்பட வில்லை என மலைக்குச் சென்று வந்த ஐயப்ப பக்தர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் இரா.ரமேஷ்சங்கர் கூறும்போது, “15 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்றுவருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக மலையில் சுகாதாரம் என்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. ஐப்பசி மாத நடைத் திறப்புக்கு சென்றபோது, பம்பையில் அதிக நீரோட்டம் இருந்தது. ஆனால், ஆற்றின் படித்துறை எங்கும் பக்தர்கள் விட்டுச்சென்ற ஆடைகள் அகற்றப்படாமல் கிடந்தன. பம்பையில் உள்ள கழிவறைகள் முழுக்க சேறும் சகதியுமாக இருந்தன. துர்நாற்றம் வீசியது. சபரிமலையில் உள்ள நடைப்பந்தலிலும், அதைத் தொடர்ந்து சந்நிதானத்துக்குச் செல்லும் பதினெட்டாம் படி அருகிலும் ஏராளமான காட்டுப் பன்றிகள் சுற்றித் திரிந்தன. முந்தைய ஆண்டுகளில் இதுபோல பார்த்ததில்லை. சபரிமலையை பராமரித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் கேரள அரசும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

சபரிமலையில் உள்ள நடைப்பந்தல், மஞ்சமாதா கோயிலுக்கு அடுத்துள்ள அன்னதான மண்டபம் ஆகிய இடங்களிலும் ஏராளமான பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த இருமுடிப் பை மற்றும் பொருள்களை அருகில் வைத்துக் கொண்டு உறங்குகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்களை உண்பதற்காக அதை மோப்பம் பிடித்துக் கொண்டு இந்த பகுதிகளில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக திரிகின்றன. சந்நிதானத்துக்கு செல்லும் பதினெட்டாம் படியின் இருபுறங்களிலும் தேங்காய் உடைக்கும் இடத்துக்கு அருகிலும், அரவணை பாயசம் விற்பனை செய்யும் கூடத்திலும் பன்றிகள் பயமின்றி உலா வருகின்றன.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக தேவசம் போர்டு மற்றும் நன்கொடையாளர்களால் கட்டப்பட்ட விடுதிகள் உள்ளன. இந்த அறைகளில் உள்ள கழிவறைகள் முறையாக தூய்மைப்படுத்தப்படுவதில்லை. விடுதிகளை ஒப்பந்த முறையில் பராமரிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் கடமையை சரிவர செய்வதில்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

மேலும், காடு என்பதால் பாம்புகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. ஆனால் விடுதிகளிலோ அல்லது அன்னதானக் கூடங்களுக்கோ வரும் பாம்புகள் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால், அதை பிடிக்க அவர்கள் விரைந்து வருவதில்லை. சிலர் பிடித்து சாக்குகளில் கட்டி வைத்தாலும், அதை உடனடியாக வனத்துறை பெற்றுச் செல்வதில்லை, அப்படியே பெற்றுச் சென்றாலும், அதை அருகிலேயே விட்டுச் சென்று விடுகின்றனர். இது பக்தர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்கின்றனர் இங்கு சேவையில் ஈடுபடும் ஆன்மிக அன்பர்கள்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் சுத்தத்துக்கும், சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். வரும் மண்டல பூஜைக்காக நவம்பர் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 26-ம் தேதி சாத்தப்படவுள்ளது. ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ள மகரஜோதி பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டு ஜனவரி 20-ம் தேதி சாத்தப்படவுள்ளது. அதற்குள்ளாவது கேரள அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.

SCROLL FOR NEXT