உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளுக் கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்டார். மாநிலத்தில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதைத் தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பின்னும் மதவாதக் கட்சியான பாஜகவுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
லக்னோவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அவர் மேலும் கூறியது: முழுமையான முன் ஏற்பாடுகளுடன் எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. மத்தியில் அடுத்து அமையும் அரசை தீர்மானிக்கும் சக்தியாக பகுஜன் சமாஜ் உருவாகும். அந்த சூழ்நிலையில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்றார் மாயாவதி.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி ஆட்சி அமைக்க 3 முறை உதவிய பாஜக குறித்துப் பேசிய அவர், ஏற்கெனவே மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்திருக்கிறோம். இனி அதுபோன்று நடக்காது. ஏனெனில் அவர்களின் சிந்தனையிலும், கொள்கையிலும் மாற்றம் ஏதுமில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தபோதும்கூட எங்கள் கொள்கைப்படிதான் ஆட்சி நடைபெற்றது. அவர்கள் ஆட்சியில் தலையீடு செய்ய முயற்சித்தபோது நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம்.
ஊழல், வறுமை, வேலைவாய்ப்பு இன்மை போன்ற பிரச்சினைகளைத் தவிர மதவாதம், மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளுக்கு இடையிலான போட்டியாகவும் இத்தேர்தல் உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இக்கொள்கையின் அடிப்படையில்தான் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
மதவாத கட்சியான பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது. அதே நேரத்தில் ஆட்சி முறையில் அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்ட காங்கிரஸ் கூட்டணியும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றார்.