முறைகேடுகள் செய்ய முயற்சித்தால் அனிச்சையாக இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் அடுத்த தலைமுறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்தராகண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. உத்தர பிரதேசத்தில் எதிர்பாராத அளவில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யப் பட்டதாலேயே பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் புகார் எழுப்பினர்.
அதேசமயம் தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது. மத்தியபிரதேச மாநிலம் பிந்த் தொகுதி இடைத்தேர்த லுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி அண்மையில் தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்துடன் எந்த கட்சிக்கு வாக் களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான விவிபாட் இயந்திர மும் இணைக்கப்பட்டு பரிசோதிக் கப்பட்டது.
அப்போது எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே வாக்கு விழுந்ததாக உறுதி செய்து, அதற்கான ரசீது விவிபாட் இயந்திரத்தில் இருந்து வெளி யானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சோதனையின் போது இத்தகைய தவறுகள் நிகழும் என தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் முறைகேடுகள் செய்ய முயற்சித்தால் அனிச்சை யாக இயங்குவதை நிறுத்திக் கொள்ளும் அடுத்த தலைமுறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மின்னணு வாக்கு இயந்திரத்தின் உண்மைதன்மையை அங்கீகரிப் பதற்காக சுய பரிசோதனை தொழில்நுட்பம் இந்த ‘எம்3’ வகை இயந்திரங்களில் புகுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் பொதுத் துறை அல்லாத பிற நிறுவனங்கள் தயாரிக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்களுடன், ‘எம் 3’ வகை இயந்திரங்களை இணைக்க முடியாது. அப்படி முயற்சித்தால் முறைகேடுகள் நடப்பதை காட்டிக் கொடுத்து விடும்.
இந்த புதிய இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதற்கு ரூ.1,940 கோடி தேவைப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2006-க்கு முன் வாங்கப்பட்ட 9 லட்சத்து 30,430 இயந்திரங்களை மாற்றுவதற்கும் தேர்தல் ஆணை யம் முடிவு செய்துள்ளது.