வேவு பார்ப்பு விவகாரத்தில் பாஜக இரட்டை நாக்குடன் இருவேறு விதமாக பேசி வருகிறது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது:
கோத்ரா கலவரம் தொடர்பாக விசாரிக்க முதல்வர் நரேந்திர மோடி, நானாவதி கமிஷனை நியமித்தார். அந்த கமிஷன் 4 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், சுமார் 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் முதல்வர் மோடி விசாரணை கமிஷனை நியமித்துள்ளார். இந்த கமிஷனும் நானாவதி கமிஷன்போல்தான் செயல்படும்.
பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்டதில் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம், டெலிகிராப் சட்டம் ஆகியவை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. ஒரு இளம்பெண்ணின் தனிப்பட்ட உரிமையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதன்காரணமாகத்தான் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கமிஷன் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லியின் தொலைபேசி உரையாடல் விவரங்கள் வெளியான விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தும்.
மேலும் இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தும்.
மாறி மாறி பேசும் பாஜக
அருண் ஜேட்லியின் தொலை பேசி உரையாடல் விவரம் வெளியானபோது, அதுதொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் குரல் எழுப்பினர். அதேநேரம் இளம்பெண் வேவு பார்ப்பு விவகாரம், இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்பு ஆகியவை குறித்து கமிஷன் அமைக்க பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது, மாறி மாறி பேசும் அந்தக் கட்சியின் இரட்டை நாக்கை வெளிப்படுத்துகிறது. ஒரு மாநில முதல்வர் மக்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதை சட்டம் ஒருபோதும் அனுமதிக்காது என்று கபில் சிபல் கூறியுள்ளார். -பி.டி.ஐ.