இந்தியா

எல்லை கோட்டை தாண்டியதாக பிடிபட்ட இந்திய வீரரை விடுவித்தது பாகிஸ்தான்

செய்திப்பிரிவு

கடந்த 4 மாதங்களாக பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய வீரர் சந்து பாபுலால் சவான் (22) நேற்று நாடு திரும்பினார். மனிதாபிமான அடிப்படையில் இவர் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சவான், ராஷ்ட்ரிய ரைபில்ஸ் படையில் பணியாற்றி வந்தார். காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டிய ராணுவச் சாவடியில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்செயலாக எல்லையை கடந்து பாகிஸ்தான் பக்கம் சென்றுவிட்டார்.

இவர், பாகிஸ்தான் படையினரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட விவரம், எல்லையில் துல்லியத் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறிய பிறகு வெளியானது.

எனினும் துல்லியத் தாக்குதலில் சவான் பங்கேற்கவில்லை என ராணுவம் கூறியது. “ராணுவ வீரர்களும், பொதுமக்களும் தற்செயலாக எல்லையை கடப்பது புதிதல்ல. இவர்கள் வழக்கத்தில் உள்ள நடைமுறைகளின்படி திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்” என ராணுவம் தெரிவித்தது. பாகிஸ்தான் படையினரிடம் சவான் சிக்கிய தகவல் அவரது வீட்டை அடைந்ததை தொடர்ந்து, அவரது பாட்டி மாரடைப்பால் இறந்தார்.

பாகிஸ்தான் பிடியில் இருந்து சவானை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் கடந்த செப்டம்பர் மாதம் கூறினார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சவானை பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். சவான் நாடு திரும்பியதை ராணுவ இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே நேற்று உறுதி செய்தார்.

சவான் விடுதலை தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று வெளியிட்ட செய்தியில், “கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி சவான் நன்கு அறிந்தே எல்லைக் கட்டுப்பாட்டை கடந்துவந்து எங்களிடம் சரண் அடைந்தார். இந்திய ராணுவ கமாண்டர்கள் அவரை மோசமாக நடத்தியதால் அவர் இவ்வாறு செய்துள்ளார்” என்று கூறியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மனிதாபிமான அடிப்படையிலும் எல்லையில் அமைதியை உறுதி செய்யும் கடமையுணர்வு காரணமாகவும் இந்திய வீரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT