உத்தரபிரதேச தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி புகார் எழுப்பியிருந்தார்.
இந்த சூழலில் மத்தியபிரதேச மாநிலத்தில் இடைத்தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரத்தை இணைத்து முன் னோட்ட பரிசோதனை நடத்தப் பட்டது. அப்போது எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும், பாஜகவுக்கே வாக்கு விழுந்ததாக ரசீது வெளியானது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இனி வரும் தேர்தல்களில் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு பயன் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கள் வலுவாக எழுந்துள்ளன. இந்நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து மக்களும், அரசியல்வாதிகளும் எழுப்பிய பல்வேறு சந்தேகங் களுக்கும் கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையம் பதில் அளித் துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:
வாக்குப்பதிவு இயந்திரத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது. 2006-ம் ஆண்டு வரை எம்1 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதில் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் புகுத்தப் பட்டுள்ளன. எனவே அதை யாராலும் ‘ஹேக்’ செய்ய முடியாது. 2006-க்கு பின் 2012 வரை உற்பத்தி செய்யப்பட்ட எம்2 வகை இயந்திரத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் புகுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் வசம் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கணினி மூலம் கட்டுப்படுத்த முடியாது. இணைய தளம் அல்லது பிற தொலை தொடர்புகள் மூலமாகவும் அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாது.
மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தை தயாரிக்கும் உற்பத்தி யாளர்களால் கூட, அதில் முறைகேடுகள் செய்ய முடியாது. வாக்குப்பதிவு இயந்திரத்தை வெளிநபர்கள் யாராவது திறக்க முயற்சித்தால், சேதப்படுத்தப் பட்டதை காட்டிக் கொடுத்துவிடும். அதன் மென்பொருளிலோ அல்லது தொழில்நுட்பத்திலோ கூட எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினியுடன் இணைக்க முடியும். அதை வைத்து இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும். இதன் காரணமாகவே வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலின்போது பயன்படுத்த தயங்குகின்றனர். ஆனால் இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.