கேரள மாநில போலீஸ் துறைத் தலைவர் டி.பி.சென்குமார் தனது பிரியாவிடை உரையில் போலீஸ் துறை உயர்மட்டத்தில் கிரிமினல்கள் பதவியில் இருக்கிறார்கள் என்றும் அவர்களது சட்ட விரோத செயல்பாடுகளைத் தான் ஒடுக்கியதாகவும் குறிப்பிட்டார்.
திருவனந்தபுரம் போலீஸ் பேரணி மைதானத்தில் பிரியாவிடை உரையாற்றிய டி.பி.சென்குமார், கீழ்மட்ட அதிகாரிகளில் 1% கிரிமினல்கள் இருக்கிறார்கள் என்றால் உயர்மட்டத்தில் அதாவது ஐபிஎஸ் அதிகாரிகள்ல் 4-5% கிரிமினல்கள் உள்ளனர் என்று அதிர்ச்சித் தகவல் தெரிவித்தார்.
போலீஸ்துறை தனக்குள்ளேயே அச்சுறுத்தலைச் சந்திக்கிறது என்கிறார் அவர்.
தனக்கும் கேர்ள முதல்வர் பினரயி விஜயனுக்கும் மோதல் உள்ளதாக எழுந்த செய்திகளை மறுத்த சென்குமார், மீண்டும் தான் பதவியில் அமர்ந்ததிலிருந்து பினரயி விஜயன் தனக்கு முழு ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்டார். விஜயனின் ஆட்சி உயர்தரமானது என்று சென்குமார் புகழாரம் சூட்டினார்.
அட்டப்பாடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் நலனுக்காக தன்னுடைய ஒரு பகுதி சம்பளத்தை அளித்த சென்குமாரின் செயலை முதல்வர் விஜயன் மனதாரப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
“போலீஸ் அதிகாரிகளுக்கு அரசியல் பார்வைகள் இருப்பது சரியே, ஆனால் இது அவர்களது கடமையில் குறுக்கிடக்கூடாது, சட்டத்தை காப்பாற்ற போலீஸ் அதிகாரிகள் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
மேலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்போர் எந்த வித அழுத்தத்திற்கும் அடிபணியக் கூடாது. துல்லியமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் மக்கள் அழுத்தத்தை எதிர்கொள்ள தவறான குற்றச்சாட்டுகளை யார் மீதும் பதிவு செய்யக்கூடாது என்றும் தற்போது தான் பொதுமக்கள் நலனுக்காக சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் கூறினார் சென்குமார்.