இந்தியா

நீட் மசோதா ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம்: டெல்லியில் மாநில அமைச்சர்கள் இன்று பேச்சு

ஆர்.ஷபிமுன்னா

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் முயற்சியாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று (புதன்கிழமை) சந்தித்து பேசுகின்றனர்.

மருத்துவக் கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் ‘நீட்’ மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதில் தமிழக அரசு தீவிரம்காட்டி வருகிறது.

இது தொடர்பாக டெல்லியில் மத்தியமனிதவள மேம்பாடு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களை தமிழகத்தின் இரு அமைச்சர்கள் இன்று (மார்ச் 8) சந்திக்கின்றனர்.

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை வரும் கல்வியாண்டு முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இத்தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இதன் காரணமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 31-ல் நிறைவேற்றியது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் கல்வி இடம்பெற்றுள்ளதால் இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இது குறித்த செய்தி ‘திஇந்து’வில் பிப்ரவரி 22-ல் வெளியானது. நீட் மசோதாவை பெற்றுக்கொண்ட அமலாக்க முகவரான மத்திய உள்துறை அமைச்சகம் அதை மனிதவள மேம்பாடு, சுகாதாரம் ஆகிய அமைச்சகங்களின் கருத்துகேட்டு அனுப்பியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான தேதி நெருங்குவதால், அங்கு நிலுவையில் உள்ள மசோதாவை, அவர்களிடம் பேசி ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக, தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், அத்துறையின் இணைச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்கான அவசியம் குறித்து எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு அடுத்தகட்டமாக மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்துப் பேசுகின்றனர்.

இதற்காக, இன்று காலை டெல்லிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தனர். மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவையும் இவ்விரு அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர்.

உ.பி. தேர்தலின் வாரணாசி பொறுப்பாளராக ஜே.பி. நட்டா இருப்பதால் அவர் இன்று வாக்குப்பதிவு முடிந்த பின் டெல்லி திரும்புகிறார். அவரை இன்று மாலை அல்லது நாளை காலையில் தமிழக அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு விரும்புவதால் அது தொடர்பான தமிழக அரசின் மசோதா மீது மத்திய அமைச்சகங்கள் போதிய ஆர்வம் காட்டாமல் உள்ளன. தற்போது தமிழக அரசு காட்டும் தீவிரத்தால் நீட் மசோதாவில் மத்திய அரசு தனது இறுதி முடிவை விரைவில் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த முடிவு தமிழகத்துக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறமுடியாது என மத்திய அமைச்சக வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் தெரிவித்தன.

SCROLL FOR NEXT