பல்வேறு நீதிமன்றங்களில் மறைமுக வரி தொடர்பான வழக்குகளில் மத்திய அரசு சார்பாக வாதாட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நியமித்த 111 வழக்கறிஞர்களை மத்திய அரசு நீக்கி அதிரடி முடிவெடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை ‘முன்னெப்போதும் நடைபெறாதது’ என்று சட்ட, நீதித்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த முடிவை அறிவித்த மத்திய சுங்க மற்றும் தீர்வை வரி வாரியம் நீக்கத்துக்கான காரணங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. இந்த 111 வழக்கறிஞர்கள் உட்பட வாரியத்தினால் நியமிக்கப்பட்ட 251 சீனியர்/ஜூனியர் வழக்கறிஞர்களின் காலம் ஜூன் 8, 2019-ல் தான் முடிவுக்கு வருகிறது.
இந்த முடிவு ‘இயற்கை நீதிக்கு எதிரானது’ என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மத்திய சுங்க மற்றும் தீர்வை வாரியத்தின் வழக்கறிஞர்கள் நிலைக்குழு மதிப்பு மிக்கதாக சட்ட வட்டாரங்களில் கருதப்படுகிறது, காரணம் இவர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள் என்பதே.
இந்நிலையில் இவர்கள் நீக்கம் இயற்கை நீதிக்குப் புறம்பானது என்று கருதப்படுவதோடு, அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த சட்ட வல்லுநர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.