சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதிக்கு அருகில், இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ‘மலபார் கூட்டு கப்பற்படை பயிற்சி’ நேற்று தொடங்கியது.
தென் சீன கடல் பகுதியில் உள்ள சில தீவுகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த தீவுகளில் ராணுவ தளவாடங்களையும், கட்டுமானப் பணிகளையும் சீனா செய்து வருகிறது. இதற்கு இந்தியா, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவு கிறது.
நீர் மூழ்கி கப்பல்
இந்நிலையில் இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களுக்குள் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தென் சீன கடல் பகுதிக்கு அருகில் கூட்டு கப்பற்படை பயிற்சியை நேற்று தொடங்கின. கப்பலில் இருந்து ஏவுகணைகளை செலுத்தி எதிரி இலக்கை அழித்தல் உட்பட பல்வேறு பயிற்சிகளில் 3 நாட்டு கப்பற்படை வீரர்களும் ஈடுபட உள்ளனர். இந்த பயிற்சியில் அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் போர்க் கப்பல்கள், அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்களும் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து இந்திய கப்பற்படை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் 20-வது கூட்டுப் பயிற்சி தொடங்கி உள்ளது. இதில் ஐஎன்எஸ் சத்புத்ரா, ஐஎன்எஸ் சயாத்ரி, ஐஎன்எஸ் சக்தி, கிர்ச் ஆகிய போர்க் கப்பல்கள் பங்கேற்றுள்ளன. இந்தப் பயிற்சி இந்திய பசிபிக் கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும்’’ என்றனர்.
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ஆண்டுதோறும் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி கடந்த 1992-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து ‘மலபார் பயிற்சி’ என்ற பெயரில் கப்பற்படை பயிற்சியில் ஜப்பானுடன் இணைந்து நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னை கடல் பகுதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாடுகளின் கப்பற்படைகள் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.