இந்தியா

காஷ்மீர் தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்பதை பிரதமர் ஏற்பாரா? - காங். கேள்வி

பிடிஐ

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

நாட்டின் எல்லைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு கடந்த 2 ஆண்டுகளாக கேள்விக்குறியாகி உள்ளன. உளவுத் துறையின் தோல்வியே இதற்குக் காரணம். குறிப்பாக, காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

ஏற்கெனவே, பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், ராணுவத்தை உஷார்படுத்தாமல் விட்டது ஏன்? எனவே, இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும்.

உளவுத் துறையின் தோல்வியே இதற்குக் காரணம் என மோடி ஒப்புக் கொள்வாரா? தாக்குதலை முன்கூட்டியே கணித்து தடுக்கத் தவறியவர்கள் மீது (பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் உட்பட) பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா?

தீவிரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு பொருளாதார தடை விதிக்குமாறு சர்வதேச நாடுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சர் நடிகர் ஆமிர் கான் உள்ளிட்டோரை மிரட்டுவதிலேயே கவனம் செலுத்துகிறார். நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT