கோவா, மணிப்பூர் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை, பண பலத்தைப் பயன்படுத்தி பாஜக திருடுவதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
தேர்தல் முடிவு வெளியான பிறகு முதன்முறையாக, டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதுபோல, கோவா, மணிப்பூரில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சி யாக விளங்குகிறது. ஆனால், அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதுபோன்ற சூழலில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி யைத்தான் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், கோவா, மணிப்பூர் ஆகிய 2 மாநிலங் களிலும் ஆட்சி அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற் கொண்டு வருகிறது. இதற்காக ஆளுநர் அலுவலகங்களை அவர்கள் தவறாக பயன் படுத்துகின்றனர்.
இந்த இரு மாநில ஆளுநர் களும் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளனர். இதன் மூலம் ஆளுநர்கள் ஒருதலைப்பட்ச மாக செயல்படுகின்றனர். பாஜக பண பலத்தைப் பயன்படுத்தி மக்கள் வழங்கிய தீர்ப்பை திருடுகிறது. இதன்மூலம் ஜன நாயகத்தை அக்கட்சி குழிதோண்டி புதைக்கிறது.
பாஜகவுடன் நாங்கள் சித்தாந்த ரீதியாக போட்டி போடுகிறோம். ஆனால் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பாஜகவின் சித்தாந்தமோ வேறு மாதிரியாக இருக்கிறது. அதை எதிர்த்துப் போரிடுகிறோம். மக்கள் தீர்ப்பை திருடுவதற்கு பாஜக எவ்வளவு பணம் கொடுத்தது என தெரிவிக்க வேண்டும்.
மேலும் உத்தரப்பிரதேசம், உத்தராகண்டில் வெற்றி பெற் றுள்ள பாஜகவுக்கு வாழ்த்துகள். ஆனால் அக்கட்சியின் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மதக்கலவரங்களைத் தூண்டியதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
அதேநேரம் எந்த ஒரு கட்சிக்கும் வெற்றி, தோல்வி என்பது வழக்கமானதுதான். அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் எங்களுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், பாஜகவுடன் சித்தாந்த ரீதியாக தொடர்ந்து போரிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜேட்லி மறுப்பு
ராகுல் கருத்து பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது முகநூலில், “காங்கிரஸ் கட்சியின் புகார் மிகைப்படுத்தப்பட்டது. கோவா, மணிப்பூரில் மக்கள் தீர்ப்பை பாஜக திருடுவதாக அவர்கள் கூறியிருப்பதில் உண்மை இல்லை.
இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றமே நிராகரித்து விட்டது. மேலும் அக்கட்சியின் இந்தப் பிரச்சினையை மக்களவையிலும் எழுப்ப முயன்றனர்” என பதிவிடப்பட்டுள்ளது.