ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 12 மணி வரை 20 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. 199 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் சுமார் 4 கோடி பேர் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள்.
ஆளும் காங்கிரஸ் தரப்பில் முதல்வர் அசோக் கெலோட், எதிர்க் கட்சியான பாஜக தரப்பில் அதன் தலைவர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட 2087 பேர் களம் இறங்கியுள்ளனர். மாநிலம் முழுவதும் 4722 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கும் டிசம்பர் 8ம் தேதி ராஜஸ்தானில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.
தேர்தல் அமைதியாக நடக்க எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தேர்தல் அலுவலக தலைமை ஆலோசகர் சனிக்கிழமை தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் மேக்வால் இறந்ததையடுத்து சுரு பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், பாஜகவில் தலா 200 வேட்பாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் 195 பேர், மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் 38, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் 23 பேர், தேசியவாத காங்கிரஸ் கட்சி தரப்பில் 16 பேர், பிற கட்சிகள் தரப்பில் 666 பேர், சுயேச்சைகள் 758 பேர் தேர்தலில் போட்டி யிடுகின்றனர்.
ஜோத்பூர் மாவட்டம் சர்தார்புரா தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அசோக் கெலோட்டை எதிர்த்து பாஜக சார்பில் ஷாம்பு சிங் கெடேசர் போட்டியிடுகிறார்.
ஹதாவுதி பகுதியில் உள்ள ஜாலராபதன் தொகுதியில் போட்டி யிடும் வசுந்தரா ராஜேவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீனாட்சி சந்திராவத் போட்டியிடுகிறார்.
இரு வாரங்களாக நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 33 மாவட்டங்களை உள்ளடக்கிய 21 கூட்டங்களில் பங்கேற்று தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
பிரதமர் மன்மோகன் சிங் ஜெய்ப் பூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தனித்தனியாக 8 பிரசாரக் கூட்டங்களில் பேசினர்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத்யாதவ், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் ஆகியோரும் பிரசாரத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினர்.
200 இடங்களைக் கொண்ட தற்போதைய 13வது சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சி தரப்பில் 101 பேர், பாஜக தரப்பில் 79 பேர், மார்க்சிஸ்ட் கட்சியில் 3 பேர், ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, லோக்தந்திரிக் சமாஜவாதி கட்சி தரப்பில் தலா ஒருவர், 13 சுயேச்சைகள் எம்எல்ஏக்களாக உள்ளனர்.