இந்தியா

பெல்லட்டுக்கு மேலும் ஓர் இளைஞர் உயிரிழப்பு: 81 ஆனது காஷ்மீர் கலவர பலி

பிடிஐ

காஷ்மீரில் பெல்லட் குண்டுகளுக்கு மேலும் ஓர் இளைஞர் பலியானதையடுத்து, அங்கு கலவர பலி 81 ஆக அதிகரித்துள்ளது.

காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி, ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பிரிவினைவாதிகளின் தொடர் போராட்ட அறிவிப்புகளால் அங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் ஸ்ரீநகரின் ஹர்வான் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மோமின் அல்டாப் கனாய் வெள்ளிக்கிழமை இரவு பெல்லட் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெக்கப்பட்டார்.

நேற்றிரவு ஹர்வான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தினர். இந்த போராட்டத்தில் படையினர் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டம் ஓய்ந்த பின்னர் மோமின் என்ற இளைஞர் மாயமாகியிருந்தார். இந்நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து காஷ்மீர் கலவர பலி 81 ஆக அதிகரித்துள்ளது.

காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால் பாரமுல்லா, பட்டான், அனந்தநாக், சோபியான், புல்வாமா உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

70-வது நாளாக இயல்பு நிலை முடக்கம்:

70-வது நாளாக காஷ்மீரில் இயல்பு நிலை முடங்கியுள்ளது. பிரிவினைவாதிகள் வரும் 22-ம் தேதி வரை போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மாலை நேரங்களில்கூட போராட்ட கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ளாமல் பிடிவாதமாக இருக்கின்றனர் பிரிவினைவாதிகள். கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்றன. பொதுப் போக்குவரத்தும் இல்லை. கல்வி நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன.

SCROLL FOR NEXT