கர்நாடகாவில் கன்னட அமைப் பினர் சார்பில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. கன்னட அமைப்பினரின் தொடர் போராட்டம் காரணமாக வியாபாரி களும், மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மகதாயி நதி நீர் விவகாரம், விவசாயக் கடன் ரத்து, மேகே தாட்டுவில் அணை உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட அமைப்புகளின் கூட்ட மைப்பு சார்பில் கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அரசு ஆதரவு அளிக்காததால் பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் உள்ளிட்டவை வழக்கம் போல இயங்கின. பள்ளி, கல்லூரி உள்ளிட்டவையும் செயல்பட்டன.
கன்னட அமைப்புகள் கூட்ட மைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் பெங்களூருவில் உள்ள டவுன் ஹால் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உள்ளிட்டோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீஸார் வாட் டாள் நாகராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரை கைது செய்தனர்.
இதேபோல கோலார், சிக்கப்பள் ளாப்பூர், ஹூப்ளி, கார்வார் உள் ளிட்ட இடங்களில் கன்னட அமைப் பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு, டயர்களையும் மரக் கட்டைகளையும் கொளுத்தினர். ஹூப்ளியில் திறந்திருந்த கடை களை அடைக்குமாறு மிரட்டிய தால் கன்னட அமைப்பினருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை யடுத்து போலீஸார் கன்னட அமைப்பினரை கைது செய் தனர்.
தமிழக பேருந்துகள் நிறுத்தம்
கடந்த முறை நடந்த போராட் டத்தின்போது தமிழக அரசின் பேருந்துகள் தாக்கப்பட்டதால், கர்நாடக - தமிழக எல்லையில் நூற் றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர். முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தமிழக பேருந்துகள் ஓசூரிலும், தமிழக எல்லையிலும் நிறுத்தப்பட்டன. கன்னட அமைப் பினரின் போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்காததால், பிற்பகலில் பேருந்துகள் வழக்கம்போல கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டன.
இதனிடையே மறைந்த என்.டி.ராமாராவின் பேரனும் நடி கருமான ஜானகிராமன் நேற்று காரில் கோலாருக்கு வந்தபோது போராட்டக்காரர்கள் வழி மறித் தனர். ஜானகிராமனை காரை விட்டு கீழே இறக்கி, மத்திய அரசுக்கு எதிராகவும் கர்நாடகா வுக்கு எதிராகவும் கோஷமிட வைத்தனர். இதனால் அங்கு கூட்டம் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் தொடர்ந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால் அரசியல் கட்சி யினரும், தனியார் நிறுவனங்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கன்னட அமைப்பினரின் அத்துமீறிய போக்கால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாகவே முழு அடைப்பு போராட்டத்துக்கு இம்முறை போதிய ஆதரவு கிடைக்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.